நூலாசிரியர்: நாரணோ ஜெயராமன்
பக்கங்கள்: 120
முதல் பதிப்பு: அக்டோபர் 2021
ஜெயராமனின் கதைகளின் மிக முக்கியமான குணாம்சம், நிகழ்வுகளை வரிசையாகக் கட்டமைக்காமல் முன்னும் பின்னும் நகர்ந்து போய் நமக்கு நாமே உருவாக்கிக்கொண்ட வாழ்வு முறையிலேயே அவரின் அனைத்துக் கதைகளும் அமைந்துள்ளன. நிகழ்வுகள், காட்சிகள், வருணனைகள் என அவர் அடுக்கிக் காண்பிக்கும் அல்லது கலைத்துப்போடும் அழகு அலாதியானது. ஒரு தேர்ந்த வாசக மனம் இவை அனைத்திற்குமான ஊடுபாவு ஒரே ஒரு மாயக்கயிறு என்பதை வாசிப்பின் தொடக்கத்திலேயே கண்டுபிடித்துவிடும்.
- ஜனமித்திரன், முன்னுரையில்
ஒதுங்கி நின்று, அலட்சியமும், தெளிவும், புலனுலகை அது உள்ளபடியே துணிந்து, புரிந்து, கண்கொண்டு அனுபவிக்கும் விவேகமும், அந்த விவேகத்தைப் பேச்சமைதி சார்ந்த ஒரு சரஸமொழியில் வெளியிடும் விசேஷத்தன்மையும் நாரணோ ஜெயராமனுடையவை.
- பிர்மிள் தர்முஅரூப்:சிவராம், ‘வேலி மீறிய கிளை’ முன்னுரையில் (1976)
அம்மா, அப்பா, சகோதர சகோதரிகள், குழந்தைகள், உறவும் நட்புமான சமூகப் பின்புலத்தில் இயங்கும் வாழ்க்கை high resolution எழுத்தில் சித்திரங்களாக, குறும்படங்களாகத் தரப்பட்டிருக்கிறது. கவிஞனுக்கேயான உணர்வுகளின் - வண்ணம், வாசனை, சப்தம், சங்கீதம், காட்சி, சலனங்கள் - துல்லியமான பதிவுகள். தெரியாத, அனுபவிக்காத எதையும் சொல்ல முயற்சிக்காத நேர்மையும் அன்றாட நிகழ்வுகள் மூலம் சமூக இயக்கத்தைப் புலப்படுத்தும் விதமும் இக்கதைகளை 45-50 ஆண்டுகளுக்குப் பிறகும் ஜீவனோடு புதிதாக வைத்திருக்கின்றன.
- என். சிவராமன்